IAS officers appointed to bring Tamil fishermen from other states to Tamil Nadu
பிற மாநிலங்களிலிருந்து படகுகளுடன் மீனவர்களைத் தமிழகம் அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா - சந்தோஷ் பாபு, மகாராஷ்டிரா - ஷ்மபு கல்லோலிகர், குஜராத் - சந்திரகாந்த் பி.காம்ப்ளே, கேரளா - அருண் ராய், லட்சத்தீவு - ஜான் லூயிஸ் ஆகியோரை நியமித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஒகி புயலால் பல்வேறு மாநிலங்களில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களை மீட்பதற்காக நடவடிக்கைகள் குறித்து கடலோர காவல்படை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, லட்சத்தீவு, குஜராத்க்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
உணவுப்பொருள் வாங்க படகில் உள்ள மீனவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் எனவும் அண்டை மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்கள் பத்திரமாக ஊர் திரும்ப அரசு டீசல் வழங்கும் எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
அதாவது மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப விசைப்படகுக்கு 750 லிட்டரும், நாட்டுப்படகுக்கு 200 லிட்டரும், டீசல் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்குதள வசதியுடன் கடற்படை காவல் நிலையம் அமைக்கப்படும் என்றும் மீட்பு நடவடிக்கைகளை தெரிவிக்க ஆங்காங்கே உதவி மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
