IAS officer getting treatment in govt hospital
கேரளாவை சேர்ந்தவர் வினித் (42). டாக்டர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐஏஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தற்போது பழனியில் சப்-கலெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
கொடைக்கானல் ஆர்டிஓ தற்போது விடுப்பில் சொந்த ஊர் சென்றுள்ளார். இதையடுத்து, வினித், கொடைக்கானல் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பணிகளை அதிகாரியாக கவனித்து வருகிறார்.
இதற்காக தினமும் கொடைக்கானல் மற்றும் பழனிக்கு அடிக்கடி சென்று வருகிறார். இதையொட்டி அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சப்-கலெக்டர் வினித் திடீரென வயிற்று வலியால் கடும் அவதியடைந்தார். இதை பார்த்ததும், அங்கிருந்த வருவாய் துறை அதிகாரிகள், அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து செல்ல முயற்சித்தனர்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரி வினித், அரசு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெறுவேன் என பிடிவாதமாக கூறிவிட்டார். இதையடுத்து அவரை பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை புறக்கணிக்கின்றனர். தனியார் மருத்துவமனையை நாடி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது.
இந்த வேளையில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் அனைத்து துறை அதிகாரிகளும் அரசு மருத்துவமனையை நாடினால், அனைவருக்கும் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவமனைகள் மீது கூறப்படும் எவ்வித குற்றச்சாட்டும் வராது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
