இந்திய விமானப்படை, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்கும் திட்டத்தை இறுதி செய்யவுள்ளது. சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், 6 போயிங் 767 விமானங்களை டேங்கர் விமானங்களாக மாற்றி வழங்கும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்கும் திட்டத்தை இந்திய விமானப்படை (IAF) இறுதி செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம், ஆறு விமானங்களை வழங்குவதற்கான ஒற்றை ஏலதாரராக (single vendor) உருவெடுத்துள்ளது.

போயிங் 767 ரக விமானங்களில் மாற்றம்

பாதுகாப்புத் துறை வட்டாரங்களின்படி, இஸ்ரேல் ஏர்கிராப்ட் இண்டஸ்ட்ரீஸ் (IAI) என்ற அந்த நிறுவனம், ஒப்பந்தம் வழங்கப்பட்டால், ஆறு பழைய மற்றும் செகண்ட் ஹேண்ட் போயிங் 767 ரக வர்த்தக விமானங்களை டேங்கர் விமானங்களாக (விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம்) மாற்றியமைத்து இந்திய விமானப்படைக்கு வழங்கவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், சுமார் 30% உள்நாட்டு உற்பத்தி உள்ளடக்கத்தை (Made in India content) 'ஆஃப்செட்ஸ்' (offsets) மூலம் உறுதி செய்ததன் காரணமாக, IAI நிறுவனம் ஒற்றை ஏலதாரராகத் தேர்வாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஏலத்தில் ரஷ்ய மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களும் பங்கேற்றன. ஆனால், செகண்ட் ஹேண்ட் விமானங்களில் 30% உள்நாட்டு உள்ளடக்கத்தை வழங்குவது உள்ளிட்ட நிபந்தனைகளை மற்ற நிறுவனங்கள் பூர்த்தி செய்யாததால், IAI மட்டுமே போட்டியில் எஞ்சியுள்ளது.

தாமதத்திற்குப் பின் நவீனமயமாக்கல்

கடந்த 15 ஆண்டுகளில் ஆறு நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை பலமுறை முயற்சித்தும், பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. தற்போதுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய சமீபத்தில் ஒரு டேங்கர் விமானத்தை குத்தகைக்கு (wet-leased) எடுத்துள்ளது.

இந்திய விமானப்படை தனது பழைய ரக விமானங்களை படிப்படியாக நீக்கி வரும் நிலையில், புதிய ரக போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரப்புதல் மூலம் நீண்ட நேரம் பறக்கும் திறனைப் பெறுகின்றன. எனவே, அதிக எண்ணிக்கையிலான டேங்கர் விமானங்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்திய விமானப்படை தற்போது ரஷ்ய தயாரிப்பான ஆறு Il-78 ரக நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களின் தொகுப்பை ஆக்ராவில் இருந்து இயக்கி வருகிறது. இவை விமானப்படை மற்றும் கடற்படையின் அனைத்து வகையான போர் விமான செயல்பாடுகளுக்கும் ஆதரவளித்து வருகின்றன.