உதயநிதி மீண்டும் சனாதனம் பற்றிப் பேசினால், ஆட்சி கலைக்கப்படுமாம்! உதார் விடும் சுப்ரமணியன் சுவாமி
உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசினார் என்று சுப்ரமணியன் சுவாமி குறை கூறியுள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, உதயநிதி மீண்டும் சனாதனம் குறித்துப் பேசினால், தமிழ்நாட்டில் ஆட்சியைக் கலைக்க வேண்டிய நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்.
ட்விட்டரில் இது பற்றிய தனது பதிவை எழுதியுள்ள சுப்ரமணியன் சுவாமி, "அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுப்படுத்தி பேசினால், தமிழக அரசை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான வேலைகளில் இறங்குவேன். இந்தியா கூட்டமைப்பு அல்ல, மாநிலங்களின் ஒன்றியம் என்பதை 1991 லேயே நிரூபித்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
பின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தான் எழுதியுள்ள கடிதத்தையும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அதில், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசினார் என்று குறை கூறியுள்ளார்.
ஏற்கெனவே சனாதனம் குறித்த பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி தலையைக் கொண்டுவந்தால் ரூ.10 கோடி தருவதாக திங்கட்கிழமை அறிவித்தார். அதற்கு பதில் சொன்ன உதயநிதி, என் தலையைச் சீவ 10 ரூபாய் போதும். நானே சீவிக்கொள்வேன் என்று நகைச்சுவையாகக் கூறினார்.
திமுகவினர் சார்பில் அயோத்தி சாமியாரைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, அந்த சாமியார் உதயநிதி தலையைக் கொண்டுர 10 கோடி ரூபாய் போதாவிட்டால் இன்னும் பணம் தருவதாகவும், தலை இருந்தால்தானே சீவ முடியும் என்றும் கூறியிருக்கிறார்.