Asianet News TamilAsianet News Tamil

குரங்கணி காட்டுத் தீ: இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் - அதுல்யா மிஸ்ரா...

I will report to the government in two months - Athulya Mishra ...
I will report to the government in two months - Athulya Mishra ...
Author
First Published Apr 5, 2018, 10:57 AM IST


ஈரோடு

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு யாரெல்லாம் காரணம் என்று தன்னுடைய விசாரணையை முழுவதுமாக முடித்து இன்னும் இரண்டு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிப்ப்பேன் என்று விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.

தேனி மாவட்டம், போடி அருகேவுள்ள குரங்கணி மலைப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ஆம்  தேதி காட்டுத்தீ பிடித்தது. இதில் குரங்கணி மலைப் பகுதியில் மலையேற்றத்துக்காக சென்றிருந்த பலர் சிக்கினர். 

இந்த விபத்தில் தீயில் கருகி 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

குரங்கணி தீ விபத்து தொடர்பான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார். காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கும் சென்று அவர் விசாரணை நடத்துகிறார். 

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஆறு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தும் வகையில் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா நேற்று ஈரோடு வந்தார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விசாரணை நடந்தது. அப்போது விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர், "குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து என்னை விசாரணை அதிகாரியாக நியமித்த உடன் மார்ச் 21-ஆம் தேதியே அங்கு சென்றேன். 

22-ஆம் தேதி குரங்கணி மலையில் தீ விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்றேன். குரங்கணி, குடகுமலை, டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டேன். 

அங்குள்ள மக்கள், பசுமை சுற்றுலா மேலாண்மைக்குழு உள்ளிட்ட 72 பேரிடம் விசாரணை நடத்தினேன். எங்கள் விசாரணையில் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது? விபத்துக்கான காரணம் என்ன? இதில் யார் தவறு செய்தது? மலையேற்றத்துக்கு மக்களை அழைத்து வந்தவர்கள் முறையாக அனுமதி பெற்று அழைத்து வந்தனரா? இதில் ஏதேனும் தவறு நடந்து உள்ளதா? வன இலகாவினர் தவறு செய்து உள்ளனரா? இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்காமல் இருக்க பரிந்துரைகள் என்ன? என்பது போன்ற கேள்விகளை முன்வைத்து விசாரணை நடந்தது. 

கடந்த 2-ஆம் தேதி சென்னையில் மலையேற்ற குழுவினரை அழைத்துச் செல்லும் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் எப்படி மக்களை ஒருங்கிணைக்கிறார்கள்? யாரிடம் அனுமதி பெறுகிறார்கள்? என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. 

அதன்பிறகு பல்வேறு தரப்பட்ட மலை ஏற்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், ஒருங்கிணைப்பாளர்களிடமும் இதுபற்றி விசாரித்து ஆலோசனைகள் செய்தோம். மலையேற்ற கிளப்புகள் நடத்துபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. 

பொள்ளாச்சியில் மலையேற்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் அமைப்புகள் இரண்டு உள்ளன. அதன் நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது ஈரோட்டில் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையை முழுமையாக முடித்து இன்னும் இரண்டு மாதத்தில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இது குரங்கணி தீவிபத்து தொடர்பான தனிப்பட்ட விசாரணை ஆணையம். இதற்கும் நீதிமன்ற விசாரணைக்கும் தொடர்பு இல்லை. அது தனியாகவும், இது தனியாகவும் நடைபெறும். எங்களது விசாரணையில் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான ஒரு தகவல் கிடைத்து இருக்கிறது. அதையும் அறிக்கையில் கூற இருக்கிறேன். 

ஒரு இடத்தில் நெருப்பு பற்ற வேண்டும் என்றால் எரியும் பொருள், ஆக்சிஜன் இவற்றுடன் ஒரு தீப்பொறி ஆகியவை வேண்டும். அங்கு எரிபொருள் இருந்திருக்கிறது. ஆக்சிஜனும் இருந்தது. ஆனால் அந்த தீப்பொறி எங்கிருந்து வந்தது என்பதுதான் கேள்வியாக உள்ளது.

சென்னிமலையை சேர்ந்த மலையேற்ற ஒருங்கிணைப்பாளர் பிரபு காவலர் காவலில் உள்ளார். தேவைப்பட்டால் இந்த வாரத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்வேன்" என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios