I will not buy bribe mentioned in broad by female V.A.O

ஆனைமலையில் வி.ஏ.ஓ.வாகப் பணியில் உள்ள முத்துமாரி என்ற பெண் கிராம நிர்வாகி 'லஞ்சம் வாங்க மாட்டேன்' என்று சகாயம் ஐ.ஏ.எஸ் பாணியில் போர்டு எழுதி வைத்திருக்கிறார்.

யார் இந்த முத்துமாரி...? அவரே சொல்கிறார் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, சின்னபூலான்பட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். மதுரை மீனாட்சி கல்லூரியில் பி.எஸ்.சி. பிசிக்ஸ் முடித்தேன். பிறகு, அரசு வேலையில் சேர்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் 2012-ல் ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மையத்தில் வி.ஏ.ஓ. தேர்வுக்காக என்னைத் தயார்படுத்திக்கிட்டேன்.

அந்த வருடமே தேர்வில் வெற்றி பெற்று, ஆனைமலையில் வி.ஏ.ஓ.வாகப் பணியில் சேர்ந்தேன். அப்புறம், காளியபுரத்துக்கு டிரான்ஸ்ஃபர்!” என்று தன் ‘ப்ரொஃபைலை’ கூறியவர். இடையிடையே பல கேள்விகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்கிறார் முத்துமாரி.

இவரின் அலுவலகத்தில் 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்று சகாயம் ஐ.ஏ.எஸ். சொன்ன வார்த்தைகளின் கீழ் 'லஞ்சம் வாங்க மாட்டேன்' என்று 'போல்ட்' ஆக எழுதப்பட்டிருக்கின்றன.

நான் மிடில் கிளாஸ், எனக்குக் கீழ்த்தட்டு மக்களுடைய கஷ்டம் நல்லாவே தெரியும். கஷ்டப்பட்டுப் படிச்சு நேர்மையா எக்ஸாம் எழுதி ஜெயிச்சு வேலைக்குச் சேர்ந்திருக்கேன். வேலைக்குச் சேர்ந்த நாள்லயே, நான் கண்டிப்பாக‌ லஞ்சம் வாங்க மாட்டேன்’ என உறுதியெடுத்துக்கிட்டேன்.

நான் லஞ்சம் வாங்காமல் இருந்தா மட்டும் போதுமா? அது மக்களுக்கும் தெரியணும் இல்லையா?. அப்போதான் லஞ்சம் கொடுக்க முன்வர மாட்டாங்க‌. சிலர் உரிய ஆவணங்களின்றி சான்றிதழ்கள் வேண்டி வெளிப்படையாக என்னிடம் பணத்தைக் கொடுத்து காரியத்தைச் சாதிச்சுக்கலாம்னு நினைச்சிருக்காங்க. அவர்களுக்கு, எவ்வளவு எடுத்துக் கூறியும் புரிய வைக்க முடியலை. அதனால்தான் நான் ,லஞ்சம் வாங்க மாட்டேன்,னு போர்டு எழுதி வெச்சிருக்கேன். அதுக்கப்புறம் நல்ல‌ மாற்றம் ஏற்பட்டது. முதலில் மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிக்கணும்.

ஆனா அரசியல் ரீதியாகவும், மேலதிகாரிங்க மூலமாகவும் ‘ப்ரஷர்’ இருக்குமே… வேலையில‌ சேர்ந்தவுடனேயே 'லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற என்னுடைய நிலைப்பாட்டை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திட்டேன். அதனால‌ பிரச்சனை இல்லை. தவிர, மக்களிடம் என்னுடைய அணுகுமுறை நேரடியாக இருக்கிறதால‌ என்னோட நிலையைப் புரிஞ்சிக்கிட்டு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க‌ என்கிறார்.

இந்த மாற்றம் தொடர் அலையா தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்னு நினைக்கிறேன் என மகிழ்ச்சியா பேசுகிறார் இந்த முத்துமாரி.