சர்வதேச லைசென்ஸ் வைத்திருப்பதால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில், அவரது வலது கை முறிந்தது. மேலும், அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் டி.டி.எப் வாசன் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக, வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிட்டு, அவரது விலையுயர்ந்த பைக்கை எரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். அதன்படி, 05.10.2033 வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 97,000 இந்தியர்கள் கைது!

இந்த நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் சென்னை புழல் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.எஃப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த விஷயத்தில் 10 வருடம் என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருப்பது நியாயமே இல்லாதது போல் இருக்கிறது. இது என்னை திருத்த வேண்டும் என்று செய்தது போல் இல்லை. என்னுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று செய்தது போல இருக்கிறது. லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்.” என்றார்.

விபத்தில் கை போனதை விட லைசென்ஸ் போனபோது மனம் வருந்தி கண் கலங்கி விட்டதாக தெரிவித்த அவர், தன்னிடம் சர்வதேச லைசென்ஸ் இருப்பதால் தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என்றும் திட்டவட்டமாக கூறினார்.

மேலும், ஜெயிலில் தனக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் நன்றாக இருந்தததாகவும், தன்னுடைய கை இன்னும் சரியாக வில்லை எனவும், மறுபடியும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.