அரிட்டாபட்டி மக்களுக்கு என்றும் துணையாக இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். மக்கள் சக்தியால் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.
மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அரிட்டாபட்டி மக்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ள நிலையில், அத்திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மதுரையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் 3 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த மக்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பை: வென்றது யார் தெரியுமா?
இந்நிலையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அரிட்டாப்பட்டியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"கிராம மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இங்கே வந்திருக்கிறேன். நான் வேறு, நீங்கள் வேறு அல்ல. உங்கள் மகிழ்ச்சியில் பங்கேற்கவே இங்கு வந்துள்ளேன். இந்த விழா உங்களுக்கான பாராட்டு விழா என்றுதான் கருதுகிறேன். நான் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.
நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. அரிட்டாப்பட்டி மக்களுக்கு என்றும் துணை நிற்போம். டங்ஸ்டன் சுரங்க ஏலத்திற்கு எதிராக போராடி மூன்று மாதத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இது சாதாரண வெற்றி அல்ல; மாபெரும் வெற்றி.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்கள் விரோத செயல்களைச் செய்து வருகிறது. மக்கள் சக்தி மூலம் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை தடுத்து நிறுத்தி உள்ளோம். மக்கள் போராட்டத்திற்கு மத்திய பாஜக அரசு பணிந்துள்ளது.
பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை; மக்களை பற்றிதான் எனக்கு கவலை. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இது மக்கள் பிரச்சினை என்பதில் தெளிவாக உள்ளேன்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, சனிக்கிழமை டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். அரிட்டாப்பட்டியில் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டிருக்கிறார்.
இதனிடையே, முதல்வர் அறிவித்தபடி, டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
மத்திய பட்ஜெட் 2025: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன?