மத்திய பட்ஜெட் 2025: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன?
ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிதி உதவியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. பிணையம் இல்லாத கடன் திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம். பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு மிக முக்கியமான இந்தத் துறைகள் எதிர்கொள்ளும் நிதி சவால்களைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
மத்திய பட்ஜெட் 2025இல் ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு கடன் உள்ளிட்ட நிதி ஆதரவை அதிகரிக்கும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு முக்கியமான பிரிவுகள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காணும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம்.
ஏற்கனவே இது குறித்து வர்த்தகத்துறை நிதியமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதம் போன்ற பிற உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஏற்றுமதித் துறை பிரதிநிதிகளின் பரிந்துரைகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முக்கிய விருப்பகளில் ஒன்று, பிணையம் இல்லாத கடன். பெரும்பாலான சிறு வணிகங்களுக்குத் தேவையான மூலதனத்தைப் பெறுவது கடினமாக உள்ளது. கடன் வழங்குவதில் உள்ள கடுமையான நடைமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் 2025: வருமான வரி அடுக்கு மாறுதா? வரிச் சலுகை யாருக்கு?
உண்மையில், கோவிட்-19 க்குப் பிறகு, வங்கிகளால் வழங்கப்பட்ட உத்தரவாத அடிப்படையிலான கடன்கள் வணிகங்கள் நியாயமான விலையில் மூலதனத்தை அணுகுவதற்கு பெரும் உதவியாக உள்ளன. அதே நேரத்தில் வங்கிகள் பெரிய அளவிலான கடனைப் பற்றி பயப்படாமல் சுதந்திரமாக கடன் கொடுத்தன.
பல மாதங்களாக நிதியமைச்சகத்திடம் நிலுவையில் உள்ள ஏற்றுமதியாளர்களின் நீண்டகால கோரிக்கையான வட்டிச் சமன்படுத்தும் திட்டமும் எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம். அதிக வட்டிச் சுமை மற்றும் தளவாடச் செலவுகளைச் சமாளிக்க இத்திட்டம் உதவியாக இருக்கும். இந்திய வர்த்தகர்கள் சர்வதேச சந்தையில் போட்டியிட சாதகமான சூழலையும் உருவாக்கும்.
சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், குறிப்பாக உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள், பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தை அளிக்கவும் முடியும் என்றும் அரசாங்கம் நம்புகிறது. சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க உதவுவதே முக்கிய நோக்கமாக இருக்கும் என்று அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டில், சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்கள் 4.3% வளர்ச்சியடைந்துள்ளன. அதே சமயம் நடுத்தர வணிகங்களுக்கான கடன்கள் 12% அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்த கடன் வளர்ச்சி 6.6% ஆக உள்ளது.
AI படிப்புக்கு டாப் 5 பல்கலைக்கழகங்கள்! படிப்பை முடித்தவுடன் மில்லியன் டாலர் சம்பளத்துடன் வேலை!