மனைவியை அடித்து துன்புறுத்தி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடி உள்ளார்களா? பெண் வெளியிட்ட கடைசி வீடியோ வாட்ஸ் ஆப்பிள் வெளியான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி சத்யா. இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவரது கணவர்  வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய பிறகு பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சத்யா கடந்த 25ம் தேதி மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சம்பத் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து நாட்றம்பள்ளி போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்யா தான் இறப்பதற்கு முன் யாரிடமோ செல்போன் வாங்கி கதறி அழுதபடி எடுத்த வீடியோ பதிவு ஒன்று நேற்று முதல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வீடியோவில், ‘தயவு செஞ்சு இந்த வீடியோ பார்க்குற யாராவது எனக்கு உதவி பண்ணுங்க. இதை பார்க்கிற யாருக்காச்சும்  என்ன மாதிரி அக்காவோ, தங்கச்சியோ, பொண்ணோ இருப்பாங்க. என்னை கட்டிக்கினு வந்தவன் என்னை ரொம்ப கொடுமை பண்றான். எனக்கு உதவி செய்றதுக்கு அப்பாவோ, கூட பிறந்தவர்களோ இல்லை.

என்னுடைய அப்பா நான் சின்ன வயதிலிருக்கும்போதே செத்து போயிட்டார். அதனால இதை பார்க்கிறவங்க என்னை இவன்கிட்ட இருந்து காப்பாத்துங்க. அம்மா மட்டும்தான். எங்க அம்மா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. இவன நம்பி வந்தேன்.

இவன் என்னை வீட்டுக்குள்ள தனி அறையில் அடைச்சி வச்சி சோறு தண்ணி இல்லாம ரொம்ப கொடுமை பண்றான். நானும் போலீஸ் ஸ்டேஷனுக்கு எத்தனையோ முறை போனேன். என்னை சமாதானம் பண்ணி அவன் கூடவே அனுப்பி வைச்சிட்டாங்க.

இவன் கொடுமையை தாங்க முடியாமல் எங்கயாவது போயிடலாம்னு நெனைச்சா, யாரு கூடவோ ஓடி போய்ட்டேன்னு அசிங்கப்படுத்தி சொல்லுவேன்னு சொல்றான். கொலை செய்துடுவேன்னு மிரட்டுறான். நான் இங்க இருந்து போனாலும் நல்ல பேரோடு போகணும்.

இதை வைச்சி தினமும் என்னையும் என் பிள்ளையையும் அடிச்சி சித்ரவதை பண்றான்.  ரொம்ப கேவலமா பேசுறான். ஒரு நாளும் என்னை பொண்ணா மதிக்கல. நான் வாழணும்னு நெனைக்கிறேன்.

எனக்காக இல்ல, என் பையனுக்காக வாழணும்னு நெனக்கிறேன். இவன் கொடுமையை தாங்க முடியல. எனக்கு இந்த வீட்டில் இருந்து விடுதலை வாங்கி தாங்க. என்னையும், என் மகனையும் யாராவது காப்பாத்துங்க’

இவ்வாறு கண்ணீர் மல்க கூறும் சத்யா, போனை கொடுத்தவரிடம் இதுபோதும் என்று கூறுகிறார். அப்போது அவரது முகம், கை, கால்களில் ரத்தக்காயங்களும், ரத்தம் வழிந்த அடையாளங்களும் உள்ளன.

இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், அவரது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்யாவை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடி உள்ளார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

இந்நிலையில், சத்யாவின் தாய் செல்வி, தனது மகள் மகனுக்காக வாழ வேண்டும் என்று நினைக்கும் நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு இல்லை.

சாவில் சந்தேகம் உள்ளது என்று நாட்றம்பள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து நாட்றம்பள்ளி போலீசார் சத்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்து சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.