மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஜெயில் வார்டன், மனைவியை கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. ஜெயில் வார்டனாக பணியாற்றிய அதே சிறையில் கைதியாக அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே தென்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு (28). இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் வார்டனாக
பணியாற்றி வருகிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை சிறையில் இருந்து மாற்றலாகி, பாளையங்கோட்டை சிறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு திருமண
ஏற்பாடுகள் நடந்துள்ளன.

உறவினரான வேலம்மாள் என்பவருக்கும் பாலகுருவுக்கும் கடந்த மே 30 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. அவர்கள், சுமுகமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், பாலகுருவுக்கு மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இதை
தொடர்ந்து அவர்கள் இருவரையும் உறவினர்கள் சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வேலம்மாள், வேறொரு நபருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார் பாலகுரு. இதனால் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, பாலகுரு திருச்செந்தூர் கோயிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் இரவு தங்கிவிட்டு வரலம் என்று மனைவி வேலம்மாளையும் பாலகுரு அழைத்துள்ளார்.

பின்னர் இருவரும் பாளையங்கோட்டை பொட்டல் கிராமத்தின் அருகே வந்தபோது, வேலம்மாள் தலையை பால குரு கொடூரமாக அறுத்துள்ளார். பின்னர், சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.

இரவு முழுவதும் வீட்டில் இருந்த பாலகுரு, அடுத்த நாள் காலையில் பாளையங்கோட்டை தாலுக்கா போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவங்களைக் கூறி சரணடைந்தார்.

இதையடுத்து பாலகுருவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.

நேற்று வார்டனாக பணியாற்றிய அதே சிறைச்சாலையில், கைதியாக பாலகுரு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.