Husband to hit his wife!

தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மனைவியை, கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரின் மனைவி சரண்யா. இவர், அறந்தாங்கியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

சரண்யா, உதயகுமார் ஆகியோருக்குள் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் வேறு ஒருவருடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறிக் கடந்த சில மாதங்களாகக் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சரண்யா வழக்கம்போல், இன்று தனியார் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சரண்யாவை பார்க்க அவரது கணவர் உதயகுமார் திடீரென அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உதயகுமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, சரண்யாவை சராமரியாக வெட்டியுள்ளார். இதனைப் பார்த்த அலுவலகத்தில் இருந்தோர் அதிர்ந்து போயுள்ளனர். இதனை அடுத்து, உதயகுமார், அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது.

பின்னர், படுகாயமடைந்த சரண்யாவை, அருகில் இருந்தோர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.