பொதுவாகவே ஒரு குழந்தை பெற்றுவிட்டால் பெண்களின் எடை அதிகரிக்க தான் செய்யும். கர்ப்பகாலத்தில் அதிகரிக்கும் இந்த எடை அதிகரிப்பு பிரசவத்திற்கு பின்னும் கூட தொடர தான் செய்யும். இது எல்லா பெண்களுக்கும் பொது தான். சில பெண்கள் தங்கள் எடையில் எவ்விதமாற்றமும் இல்லாமல் இருப்பார்கள். 

ஆனால் வெகுசிலருக்கு மட்டுமே அப்படிப்பட்ட உடல்வாகு அமையும். உலக அழகி ஐஸ்வர்யா ராய் கூட குழந்தை பிறந்த பிறகு எடை கூடி தான் பின்னர் மெலிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
நம்மவர்கள் இடையே குண்டாக இருப்பதே ஒரு மாபெரும் குற்றமாக தான் பார்க்கப்படுகிறது. இதே நிலை தான் ரூபி பியூட்டி என்ற பெண்ணிற்கும் ஏற்பட்டிருக்கிறது. 

பேறு காலத்திற்கு பிறகு ஏற்பட்ட எடை அதிகரிப்பினால் குண்டான தோற்றத்தினை பெற்ற ரூபியை அவரது கணவர் மிகவும் அசிங்கமாக இருப்பதாக விமர்சித்திருக்கிறார். அவரின் இந்த மாதிரியான விமர்சங்கள் ரூபியை மிகவும் சங்கடப்படுத்தி இருக்கிறது. 
இதனால் எடையை குறைக்க வாக்கிங் சென்ற அவர் தொடர்ந்து உடற்பயிற்சியின் மீது ஆர்வம் காட்ட துவங்கி இருக்கிறார். அதன் விளைவாக பாடிபில்டிங்கில் அவரது கவனம் திரும்பி இருக்கிறது. அவரது கடின உழைப்பின் பலனாக தற்போது அசாமில் நடந்த தேசிய அளவிலான பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றிருக்கிறார் ரூபி.


இவர் மிஸ்.சென்னையாகவும் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 6 வயது மகனுக்கு மட்டுமல்லாமல் , ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்குமே ரோல் மாடலாகி இருக்கும் இவரின் ஒரே வருத்தம் ,பாடி பில்டிங்கில் தமிழ் பெண்கள் அதிக அளவில் ஈடுபடாமல் இருப்பது தானாம்.
தாய்மை என்பது ஒரு அரிய பொக்கிஷம். அதனை அனுபவித்திட ஒவ்வொரு பெண்களுமே பல கஷ்டங்களையும் கடந்து தான் வருகின்றனர். 

பேறுகாலத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதும் கூட இயற்கையே. ஆனால் அதனை இயற்கையாக எடுத்துக்கொள்ளாமல் விமர்சிப்பது தாய்மையை அவமதிம்மது போன்றதே. அந்த அவமானத்தை சகித்துக்கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்திருக்கும் ரூபி பியூட்டி நிஜமாகவே பியூட்டி தான்.