Husband murder case should have a real investigation - Periyapandiyan wife request

கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரியபாண்டியன் உயிரிழந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி தெளிவுபடுத்த வேண்டும் என்று பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா கூறியுள்ளார்.

சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, ஆய்வாளர் பெரியபாண்டியன் மட்டும் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி வீர மரணம் அடைந்தார்.

தற்போது இவருடைய மரணத்தில் பல முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. காவல் ஆய்வாளர் முனிசேகர், ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 3 பெண்கள் உட்பட 5 பேர் கட்டை, இரும்புக் கம்பியால் போலீசாரை தாக்கினர். கொள்ளையர்கள் தாக்கியதில் தன்னுடைய துப்பாக்கி தவறி விழுந்தது. கொள்ளையர்களின் தாக்குதலையடுத்து எல்லோரும் தப்பிவிட தவறி விழுந்த என்னுடைய துப்பாக்கியை ஆய்வாளர் பெரியபாண்டியன் எடுத்தார். அவர்கள் மத்தியில் பெரியபாண்டியன் சிக்கிக் கொண்டார்.

இதைதொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பெரிய பாண்டியன் இறந்து கிடந்தார். பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டதாக முனிசேகர் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகியது. இதையடுத்து முனிசேகர் துப்பாக்கிகளை ஆய்வு செய்தபின் ராஜஸ்தான் பாலி போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கொள்ளையர்கள், பெரியபாண்டியை இரும்பு கம்பி கொண்டு தாக்கியதால் அவரால் தப்ப முடியவில்லை எனவும் முனிசேகர் கொள்ளையரை நோக்கி சுட்டதில் குறி தவறி பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், வீரமரணம் அடைந்த பெரிய பாண்டியனின் மனைவி பானுரேக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், எனது கணவர் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி எனக்கு தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் பானுரேகா கூறினார். கணவரும், முனிசேகரும், நல்ல நண்பர்கள் என்றும், இந்த விவகாரத்தில் மனசாட்சிப்படி விசாரணை செய்து தெளிவிபடுத்த வேண்டும் என்றும் பானுரேகா வேண்டுகோள் விடுத்தார்.