hunger strike in Coimbatore in kamarasar birthday Four District People Participating

ஈரோடு

காமராசர் பிறந்தநாளான வருகிற ஜூலை 15-ஆம் தேதி பூரண மதுவிலக்கு கோரி ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்ட மக்களை ஒன்றுத் திரட்டி கோவையில் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளதாக குமரி அனந்தன் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தியப் பேரவை தலைவருமான குமரி அனந்தன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியது:

“மதுரையில் கள்ளுக்கடை மறியலுக்கு ஏற்பாடு செய்ததால்தான் முன்னாள் முதலமைச்சர் காமராசரை வெள்ளையர்கள் கைது செய்ய முயன்றனர். சுதந்திரம் பெற்றபிறகு தமிழ்நாட்டில் சாராயக் கடை திறந்தபோது அதை எதிர்த்து எங்களை போன்றவர்களை போராடச் சொன்னவர் காமராசர்.

இந்த போராட்டத்தின்போது 56 ஆயிரம் பேரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையெல்லாம் நினைவுப்படுத்தவே காமராசர் பிறந்தநாளான வருகிற ஜூலை மாதம் 15-ஆம் தேதி ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்ட மக்களை ஒன்றுத் திரட்டி கோவையில் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

சாராயம் மாபெரும் தீது, அதற்காக நான் 14 முறை பாதயாத்திரை சென்றுள்ளேன். அந்த விழிப்புணர்ச்சிதான் இன்று பெண்களே சாராயக் கடையை எதிர்க்க வைத்துள்ளது,

எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கேட்டு கோவையில் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் மது வேண்டாம் என்று சொல்லும் அனைவரும் கட்சி பேதமின்றி கலந்து கொள்ள வேண்டும்.

ஒருவருடைய உணவு இதுதான் என்று முடிவு செய்கிற அதிகாரம் மத்திய மோடி அரசுக்கு இல்லை. எனவே, இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

இந்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழை உலகப்பொது மொழியாக அறிவிக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும். உலக குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய் மொழியையும், உலக பொது மொழியையும் கற்றால் உலக ஒற்றுமை ஏற்படும்.

நான் தனி கட்சி வைத்திருந்தபோது மகளிர் பிரிவின் சார்பில் வீடுதோறும் தோட்டம் என்ற திட்டத்தை பவானி கூடுதுறையில்தான் ஆரம்பித்தேன். மகளிர் அணியினரையும் இந்த திட்டத்தை நடத்துங்கள் என்று கூறி அவர்கள் நடத்திய மாநாட்டில் வேண்டுகோள் விடுத்து கீரை, வெண்டை, முருங்கை உள்பட ஆயிரம் விதைகள் கொண்ட பொட்டலங்களை என் செலவிலேயே கொடுத்தேன்.

ஆனால் இன்றைக்கு சத்தியமூர்த்தி பவனில் பெண்களுக்குள்ளே மோதல் என்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. நான் விதை கொடுக்கச் சொன்னால் அவர்கள் ஒருவருக்கொருவர் உதை கொடுக்கிறார்கள். இது காங்கிரஸ் பாரம்பரியத்துக்கு அழகல்ல. பெண்கள் செய்த தியாகங்கள் அதிகம். அந்த வழியிலே நம் மகளிர் நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.