இராமநாதபுரம்

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒ.பன்னீர் செல்வம், சசிகலா முதல்வர் நாற்காலிக்காக சண்டையிட்டுக் கொண்டனர். ஆனால், இடைப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சியை பிடித்தார்.

சசிகலா ஆதரவு அதிமுக, ஒபிஎஸ் ஆதரவு அதிமுக, மற்றும் தீபா ஆதரவு அதிமுக என இப்போது அதிமுக மூன்றாக உடைந்துள்ளது.

இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் நேற்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் திரளாக கூடினர்.

ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சகுபர் முன்னிலை வகித்தார்.

மாவட்ட இணை செயலாளர் மோகன்தாஸ், துணை செயலாளர் நாகராஜ், பொறுப்பாளர் பல்லவராஜா, இணை செயலாளர் அப்துல்அஜீஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்தப் போராட்டத்தில் இராமநாதபுரம் காசிமுருகேசன் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில், மாவட்ட துணை செயலாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.