hunger strike against vairamuthu srivilliputhur Jear

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டதைத் தொடங்குகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய பேச்சும், தினமணி நாளிதழில் ஆண்டாள் குறித்து அவர் எழுதிய ஒரு கட்டுரையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்து அமைப்புகள் வைரமுத்துக்கு எதிராக திரண்டு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் அந்த கட்டுரையும் தன்து பேச்சும், யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாக வைரமுத்து அறிவித்தார். ஆனாலும் வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன,

கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ராமானுஜ சடகோபன் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து தனது உண்ணா விரதத்தினைக் கைவிட்டார்.

இதையடுத்து ஜீயர் பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நேரடியாக வந்த மன்னிப்புக் கேட்க வேண்டும் என கெடு விதித்திருந்தார். வைரமுத்து மன்னிப்பு கேட்க தவறினால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஜீயர் அறிவித்திருந்தார்.. 



ஆனால் வைரமுத்து தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் தராத காரணத்தால், அதனை கண்டித்து, ஜீயர் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தனக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்றும் ஜீயர் கேட்டுக் கொண்டுள்ளார்.