கரூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கரூரில் ஊர்வலம் மற்றும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைப்பெற்றது. இதில், சிறுவர்கள் முதல் மாணவர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் சார்பில் ஊர்வலம் மற்றும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நேற்று நடைபெற்றது. 

குளித்தலை பெரியார் நகர் பகுதியில் தொடங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று குளித்தலை - முசிறி இடையே காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தில் முடிவடைந்தது.

பின்னர் அந்தப் பாலத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைப்பெற்றது. பாலத்தின் ஒரு பகுதியில் இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வரிசையாக  நின்று ஒருவருக்கு, ஒருவர் தங்கள் கைகளைக் கோர்த்தபடி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், இந்த ஊர்வலம் மற்றும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், மக்கள், அரசியல் கட்சி மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.