How to follow Kandhasashti festival
கந்தசஷ்டி விரதம் என்றால் என்ன?

கந்தன் சஷ்டி என்றாலே முருக பெருமானை நினைத்து விரதம் இருந்து ஆறு நாட்களாக கோலாகலமாக முருக பெருமானுக்கு பல பூஜைகள் செய்து வழிபடுவதே என கூறலாம்.
கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா.
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
கந்தசஷ்டி விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
இவ்வாறு செய்து வரும் போது, நம் மனதில் நினைத்து வந்த, அனைத்து காரியங்களும் இனிதே நிறைவேறும் என்பது நம்பிக்கை .
