Supplementary Examination: தமிழகத்தில் ஜூன் / ஜூலை 2026ல் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு துணைத் தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மார்ச் 2026 தேர்வில் தேர்ச்சி பெறாதோர், வருகை புரியாதோர் மற்றும் தனித்தேர்வர்கள் மே 18 முதல் மே 30, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத தேர்வர்கள், +1 Arrear தேர்வர்கள் மற்றும் விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
மார்ச் 2026 பருவத்தில் முதலாம் ஆண்டு (+1 Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத்தேர்வினை பள்ளி மாணாக்கர்களாக எழுதி தேர்ச்சி பெறாதோர் மற்றும் வருகை புரியாதோர். தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக்கிழமை ) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச் 2026 மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக்கிழமை ) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் (Service Centres) வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
சிறப்பு அனுமதித் திட்டம்
18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் ஜூன்/ஜூலை 2026 மேல்நிலை துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத்தினை 01.06.2026 (திங்கட்கிழமை) மற்றும் 02.06.2026 (செவ்வாய்க்கிழமை) ஆகியநாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000 (2025-2026-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சிபெறாத / வருகைபுரியாத மாணவர்களுக்கு மட்டும் இக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது) விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் (Government Examinations Service Centres)
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் (Government Examinations Service Centres)விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை wwwd.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்க வரும் தேர்வர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (Passport Size Photo)-1 ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வுக்கால அட்டவணை
ஜூன் / ஜூலை-2026 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


