How the bank robber jewelry recovered at 12 hours - Police explanation

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அடமான நகைகளை வைத்திருந்த பீரோவை திறந்து, அதில் வைத்திருந்த 636 பேரின் ரூ.8 கோடி மதிப்பிலான 32 கிலோ நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், வங்கி ஊழியர் உட்பட மூவரை போலீசார், 12 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 32 கிலோ நகைகளும் மீட்கப்பட்டது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் பாங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இங்கு, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். 

பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். அந்த வகையில் 636 பேர், ரூ.8 கோடி மதிப்பிலான நகைகளை இந்த வங்கியில் அடமானம் வைத்துள்ளனர். இந்த நகைகள் தனித்தனியாக 'பேக்' செய்யப்பட்டு வங்கியில் உள்ள லாக்கரில் பத்திரமாக வைக்க வேண்டும். ஆனால் வங்கி ஊழியர்கள் வழக்கத்திற்கு மாறாக லாக்கரில் வைக்காமல், பீரோவில் வைத்து பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்ததும், வழக்கம்போல வங்கியை பூட்டிவிட்டு மேலாளர் சேகர் மற்றும் ஊழியர்கள் சென்றுவிட்டனர். மேலும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் ஊழியர்கள் வங்கிக்கு வரவில்லை. 

இரு நாட்கள் விடுமுறைக்கு பின் வழக்கம்போல வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்தனர். வங்கியுடனான கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் வைத்திருந்த பீரோ திறந்து கிடந்தது. 

அதில் வைத்திருந்த 636 பேரின் 32 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.8 கோடி ஆகும். 
உடனே வங்கி மேலாளர் சேகருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். அவர் வங்கிக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும், வங்கியின் மண்டல மேலாளர் ஜெயபிரகாஷ் சம்பவ இடத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி, எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து, வங்கியின் மண்டல மேலாளர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

பீரோவில் வைக்கப்பட்ட 32 கிலோ நகைகள், பூட்டை உடைக்காமல் திறந்து, கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததால், வங்கி ஊழியர்களுக்கு கண்டிப்பாக தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி, டிஎஸ்பி புகழேந்தி தலைமையிலான போலீசார், வங்கி ஊழியர்கள் அனைவரையும் நேற்று முன்தினம் மாலை வேனில் ஏற்றி மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்

வங்கியில் உதவியாளராக பணிபுரிந்துவரும் செவ்வாப்பேட்டை எப்சிஐ காலனியை சேர்ந்த விஸ்வநாதன் (37) கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் வங்கியின் ஷட்டர், பீரோ மற்றும் லாக்கரில் சாவிகளை சோப்பில் பதிந்து, கம்ப்யூட்டர் மூலம் கள்ளச்சாவி தயாரித்துள்ளார்.தொடர்ந்து, வங்கியின் கீழே உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் அவரது நண்பரான தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேஷ்(24), வங்கியின் மேல் மாடியில் பிளம்பராக பணிபுரிந்து வந்த மற்றொரு நண்பரான திருவூர் கவுதம் (30) ஆகியோருடன் சேர்ந்து, கள்ளச்சாவி மூலம் ஷட்டர், பீரோ ஆகியவற்றை திறந்து, அதில் 636 பைகளில் வைத்திருந்த, 32 கிலோ நகைகளை கொள்ளையடித்ததுள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வங்கி ஊழியர் விஸ்வநாதன் உள்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் தங்களது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 32 கிலோ நகைகளையும் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நகைகள் வங்கியில் ஒப்படைப்பு 

கொள்ளை சம்பவம் பற்றி திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருவள்ளூரில் பாங்க் ஆப் இந்தியா வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரையும் இரவு திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளை 40க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வங்கியின் எடை மதிப்பீட்டாளர் ஆகியோரை வைத்து சர்பார்க்கும் பணியில் நேற்று முழுவதும் ஈடுபட்டனர். தொடர்ந்து கைப்பற்றப்பட்ட 32 கிலோ நகைகள் வங்கியில் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் நகைகளை அடமானம் வைத்த நபர்கள் வங்கிக்கு சென்று உரிய ஆவணங்களை காட்டி அதற்கான தொகையை கட்டி நகைகளை பெற்று கொள்ளலாம். திருவள்ளூரில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நவீன கேமராக்கள் பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

12 மணி நேரத்தில் 3 பேர் கைது 

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளை சம்பவம் குறித்து நேற்று முன்தினம் பகல் 11 மணிக்கு தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி., சிபிசக்கரவர்த்தி அங்கேயே முகாமிட்டு விசாரணையை துவக்கினார். தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஊழியரை கண்டறிந்து, நேற்று முன்தினம் இரவு நகைகளை மீட்டார். மேலும், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அவரது நண்பர்கள் இருவரையும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கைது செய்தார்.

12 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்து, நகைகளையும் மீட்டது பொது மக்களிடையே போலீசார் மீது வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, 636 பைகளிலும் நகைகள் சரியாக உள்ளதா? என சரிபார்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.