பைக்கில் வீலிங் செய்து கொடூர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்..! உடல்நிலை எப்படி உள்ளது என தெரியுமா.?
காஞ்சிபுரம் அருகே பைக்கில் வீலிங் செய்த போது ஏற்பட்ட விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாசன் தற்போது தனது நண்பர் அஜீஷ் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன்
யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற சேனலை வாசன் நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி வாசன் ஏற்பாடு செய்திருந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போலீஸ் தடியடி நடத்தி எச்சரிக்கும் அளவுக்கு சென்றது.
வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்
இதே போன்று பல முறை அதிவேகமாக பைக்கை இயக்கி போலீசாரிடம் அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்கப்போவதாக அறிவித்து பட பூஜையும் போட்டப்பட்டது. இந்தநிலையில் தான் நேற்று காலை கோவையில் இருந்து தனது நண்பர்களோடு மஹாராஷ்டிராவிற்கு பைக் ரைட் புறப்பட்டுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே தனது இரு சக்கர வாகனத்தை வீலிங் செய்த பொழுது நிலைதடுமாறினார். அவரது வாகனம் சாலை ஓரம் தடுப்பை மோதி பறந்து விழுந்தது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வாசன் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
டிடிஎஃப் வாசன் உடல்நிலை.?
இதனையடுத்து மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்த போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கையில் பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கையில் கைட்டோடு தற்போது அம்பத்தூரில் உள்ள தனது நண்பர் அஜீஷ் வீட்டில் டிடிஎப் வாசன் ஓய்வு எடுத்து வருகிறார். இன்று காலை வேறு மருத்துவமனைக்கு சென்று உடலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை பெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் டிடிஎஃப் வாசன் பயன்படுத்திய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் சுக்குநூறாக உடைந்தது. இதனிடையே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக வாகன ஓட்டியது ஆகிய பிரிவுகளில் பாலுசெட்டி சத்திரம் போலீஸார் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.