Asianet News TamilAsianet News Tamil

திருடர்களுக்கு பயந்து கோயில் கருவறையில் பணம் வைத்த ஓட்டல் உரிமையாளர்; அதையும் ஆட்டையை  போட்ட திருடர்கள்...

hotel owner put money in temple feared of thieves thieves stole money...
hotel owner put money in temple feared of thieves thieves stole money...
Author
First Published Jun 14, 2018, 8:34 AM IST


கன்னியாகுமரி
 
கன்னியாகுமரியில், திருடர்களுக்கு பயந்து கோயில் கருவறையில் வைத்த ரூ.5 இலட்சம் பணத்தை திருடர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம், பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜீ (45). இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

ராஜீ பேயோடு சந்திப்பு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்களுடைய குடும்ப கோயிலான பத்ரகாளி அம்மன் கோயில் பேயோடு சந்திப்பு அருகில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ராஜீ நாள்தோறும் சென்று பூஜை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் திக்கணங்கோடு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரிடம் ராஜீ சீட்டு போட்டிருந்தார். கடந்த 8-ஆம் தேதி சீட்டு தொகை ரூ.5 இலட்சத்து 20 ஆயிரத்தை வாங்கிவந்தார். 

அதன்பின்னர், அதில் செலவிற்காக ரூ.20 ஆயிரத்தை மட்டும் எடுத்தார். மீதமிருந்த ரூ.5 இலட்சத்தில் நிலம் வாங்க முடிவு செய்தார். சுற்று வட்டார பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளையர்கள் பணம், நகைகளை திருடிச்செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்ததால் ராஜீக்கு, வீட்டில் பணத்தை வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று தோன்றியது. 

இதனால், குடும்ப கோயிலில் வைத்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி கோயில் கருவறையில் ரூ.5 இலட்சத்தை வைத்துவிட்டு, தினமும் சென்று வழக்கம்போல் பூஜை செய்துவந்தார்.

இந்த நிலையில் ராஜீ, ஒருவரிடம் நிலத்தை பேசி முடித்துவிட்டு பணம் கொடுப்பதாக கூறினார். அதற்காக நேற்று காலை கோயிலுக்கு சென்றார். அப்போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, கருவறையில் வைத்திருந்த ரூ.5 இலட்சம் மற்றும் காணிக்கை பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதனைப் பார்த்து ராஜீவுக்கு ஷாக்.

பின்னர், இதுகுறித்து வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆய்வாளர் முத்துக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோயிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கோவிலில் இருந்து அருகில் இருந்த ஒரு கடைக்கு ஓடிச்சென்று நின்றுவிட்டது. 

திருடர்களுக்கு பயந்து கோயில் கருவறையில் வைத்திருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவலாளர்கள் வலைவீசி தேடிவருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios