சைவ உணவு கேட்டதற்கு அசைவ உணவை ஓட்டல் ஊழியர் கொண்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் மேனேஜரை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் படூரில் சொகுசு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் நேற்றிரவு துப்பாக்கி சத்தம் கேட்டது. துப்பாக்கி சத்தம் கேட்டதை அடுத்து, ஓட்டல் ஊழியர்கள் பதறி அடித்து ஓடி வந்தனர். அப்போது ஓட்டல் மேனேஜர் சங்கரலிங்கம், அதிர்ச்சியில் நின்றபடி இருந்தார். பின்னர், இது
குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் துப்பாக்கி சுடு சம்பவம் குறித்து விசாரித்தனர். 

இதன் பின்னர், போலீசார் செய்தியாளர்களிடம் பேசும்போது, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் அவரது நண்பர்களுடன் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது சைவ உணவு கேட்ட மாதவன் மற்றும் அவரது நண்பர்களுக்கு அசைவ உணவை ஓட்டல் ஊழியர் சிவா கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதவன், சிவாவைத் தாக்கியுள்ளார். இதை ஓட்டல் மேலாளர் சங்கரலிங்கம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது சங்கரலிங்கத்துக்கும், மாதவன் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒருகட்டத்தில் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு அவர்கள் வெளியில் வந்துள்ளனர்.

ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வெளியேற முயன்ற சங்கரலிங்கத்திடம், மேனேஜர் வாடகை பணம் கேட்டுள்ளார். அதற்கு மாதவன் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து சங்கரலிங்கத்தை சுட்டுள்ளார். துப்பாக்கி குண்டு குறி தவறி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை துளைத்த- இதில் கண்ணாடி உடைந்து சிதறியது. 

பின்னர், இது தொடர்பாக மேனேஜர் சங்கரலிங்கம், புகார் கொடுத்தார். புகாரின்பேரில் மாதவனை கைது செய்துள்ளோம். மேலும் அவரிடம் இருந்து கை துப்பாக்கி, 49 தொட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளோம். மாதவன் மீது, கொலை முயற்சி, ஆயுதத்தை வைத்து மிரட்டுதல், அதை தவறாக பயன்படுத்துதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று போலீசார் கூறினர்.