Hot Summer Ends today
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஆந்திராவில் நிலவும் இயல்புக்கு அதிகமான வெப்பம், வடமேற்கு காற்றால் தமிழகத்திற்கு பரவியேதே சுட்டெரிக்கும் வெயிலுக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியது. முதல் ஒரு வாரத்தில் கடுமையாக இருந்த வெப்பத்தின் தாக்கம், அடுத்த சில நாட்களில் குறைந்தும், பின்னர் அதிகரித்தும் காணப்பட்டன.
உக்கிரமான வெப்பத்துடன் அனல் காற்றும் வீசியதால் தலைநகர் சென்னை வெப்பக்காடாகவே காட்சியளித்தது. தலைநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் அதல பாதாளத்திற்குச் சென்றன.

கத்திரி வெயில் உக்கிரம் அடைந்த போது அதிகபட்சமாக திருத்தணியில் 116 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் வெப்பநிலை 110 டிகரி செல்சியஸாகவும், கடலூர் நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் 114 டிகிரி செல்சியஸாகவும் வெப்பம் பதிவாகி இருந்தது.
வெப்பச்சலம் காரணமாக திருவண்ணாமலை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, கோவை, ஆகிய உள்மாவட்டங்களில் கனத்த மழை பெய்துள்ள நிலையில், கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது.இதனால் தமிழகத்தில் இனி வெப்பத்தின் படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
