திண்டுக்கல்,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் மாவட்டத்தில், வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை பிடித்துச் சென்று கருத்தடை அறுவை சிகிச்சையை தவறாக செய்துள்ளனர். இதுகுறித்து கேட்கச் சென்றவரை அசிங்கமாக திட்டி மிரட்டல் விடுத்துள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் என அனைவரையும் துரத்திச் சென்று கடிக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கே பயப்படுகின்றனர்.

எனவே, நகர் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சி பணியாளர்கள் திண்டுக்கல் நகரில் சுற்றித் திரிந்த நாய்களை பிடித்துச் சென்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு திண்டுக்கல் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் புகார் மனு கொடுக்க வந்தார்.

அந்த மனுவில், “நான் ஆதித்தமிழர் பேரவையின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக உள்ளேன். எனது வீட்டில் ஜாக்கி என்ற நாயை வளர்த்து வருகிறேன். சம்பவத்தன்று என்னுடைய வீட்டில் இருந்த நாயை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது மாநகராட்சி அதிகாரிகள், கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக என்னுடைய நாயை பிடித்துச் சென்றதாக சிலர் கூறினர்.

இதையடுத்து கருத்தடை மையத்திற்கு சென்று கேட்டபோது நாய்க்கு அறுவை சிகிச்சை செய்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் நாயை வீட்டிற்கு அழைத்து வந்தேன். இந்த நிலையில் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில், 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இரத்தம் வடிந்து கொண்டே இருக்கிறது.

இதனால் நாயை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகின்றனர். இதனால் நாய்க்கு தவறாக அறுவை சிகிச்சை செய்த கருத்தடை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் எனது நாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.