சென்னை விமான நிலையம் கூரை விழுந்தது போல புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிமெண்டு பூச்சு விழுந்ததில் சிகிச்சைக்காக வந்த வாலிபர் காயமடைந்தார். அவருக்கு அங்கேயே சிகிச்சை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மேலராசவீதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் சுமார் 2500–க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதைப்போல சுமார் 550–க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதுக்கோட்டை அருகே உள்ள மச்சுவாடி கால்நடைப்பண்ணை அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த அரசு மருத்துவமனையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி பிரிவுகள், 50 படுக்கைகள் கொண்ட பிரிவுகள், விஷ முறிவு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள 43–வது வார்டின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதில் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த திருவரங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் ஐயப்பன் (18) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால், 43–வது வார்டில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் உடனடியாக வெளியே அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்கள் சுமார் 30 நிமிடத்திற்கு பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் நோயாளிகளின் உறவினர்கள் நோயாளிகளுக்கு உணவு கொடுக்கமுடியாமல் கடும் அவதி அடைந்தனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிமெண்டு பூச்சு விழுந்தது குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் டீன் பரிமளாதேவி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “நாங்கள் மழை பெய்ய தொடங்குவதற்கு முன்னே அரசு மருத்துவமனையில் மாடியில் உள்ள குப்பைகள் அனைத்து அகற்றப்பட்டு விட்டன. ஆனால் 43–வது வார்டு மாடியில் ஈரப்பதம் இருந்தததால் தான் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. 43–வது வார்டில் உள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து அதே வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
தற்போது புதிய மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட முடியாது. நான் தற்போது பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக 43–வது வார்டை சீரமைத்து கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து உள்ளேன். 43–வது வார்டில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
