high court questions about shankararaman case
சங்கரராமன் கொலை வழக்கில் அனைவரும் நிரபராதி என்றால் யார் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காஞ்சிபுரத்தில் வரதராசப் பெருமாள் கோவிலில் மேலாளராக பணியாற்றி வந்தவர் சங்கர்ராமன். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற்ற இந்த வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மணிகண்டன் என்பவர் நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதி என்றால் யார்தான் கொலை செய்தது என கேள்வி எழுப்பினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன் எனவும் புதுச்சேரி அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
