high court questioned to Is it possible to give examination results to student attractions

மாணவி வளர்மதிக்கு தேர்வு முடிவுகளை வழங்க சாத்தியம் உள்ளதா என்பதை நாளை மறுநாள் தெரிவிக்க சேலம் பெரியார் பல்கலைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த மாணவி வளர்மதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். இவர் சேலம் பெரியார் பல்கலையில் இதழியல் துறையில் படித்து வந்தார். 

சேலம் கோரிமேட்டில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி முன்பு நின்று கொண்டு மாணவிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய போது வளர்மதி கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட வளர்மதி கோவையில் உள்ள பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறி கடந்த ஜூலை 17-ம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து, வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைதொடர்ந்து மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதியை சேலம் பெரியார் பல்கலை கழகம் நீக்கம் செய்தது. 

இந்நிலையில் வருகை பதிவு குறைவாக உள்ளதால் தேர்வு முடிவுகளை வழங்க மறுப்பதாக வளர்மதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாணவி வளர்மதிக்கு தேர்வு முடிவுகளை வழங்க சாத்தியம் உள்ளதா என்பதை நாளை மறுநாள் தெரிவிக்க சேலம் பெரியார் பல்கலைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் நீதிபதி கிருபாகரன் படிப்பை முடித்துவிட்டு போராட்டத்தின் பக்கம் கவனம் செலுத்தலாம் எனவும் மாணவி வளர்மதி தவறான இயக்கத்தினரால் வழிநடத்தப்பட்டுள்ளார் எனவும் வேதனை தெரிவித்தார்.