Asianet News TamilAsianet News Tamil

ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் என்ன நடக்கிறது..? சிசிடிவி கேமிராக்களை பொருத்துக..உயர் நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென உத்தரவிடும்படி தமிழக டிஜிபி-க்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 

High Court Order
Author
Tamil Nadu, First Published Dec 23, 2021, 8:21 PM IST

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மருதசஞ்ஜீவினி என்ற ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியான செயல்பாடுகளில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அதன் நிர்வாகி சி.பி.கிரிஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும், ஆனால் சோதனை என்ற அடிப்படையிலும், புகார்கள் வருவதாகவும் கூறி அன்றாட செயல்பாடுகளில் காவல்துறை அடிக்கடி தலையிடுவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்பா, மசாஜ் சென்டர் ஆகியவற்றுக்கு எதிராக புகார்கள் வரும்போது மட்டுமே ஆய்வு செய்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால், காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதை தடுக்க முடியாது. காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகவும், அவற்றை ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

பின்னர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, சென்னை மாநகராட்சியில் உள்ளது போல தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென தமிழக டிஜிபி-க்கு நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற இடங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கவும் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தாலோ, தகவல்கள் கிடைத்தாலோ, சட்டவிதிகளை பின்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios