நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைச் செயலாளர் அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என கூறினர். மேலும் நீதிபதிகள், சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்குத் தெரியும் என்பதால் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை எனத் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னும் மீண்டும் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எச்சரித்த நீதிபதிகள், இது சம்பந்தமாகத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க ஆலோசனைகளை வழங்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களைக் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, மனுதாரர் தரப்பில், மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். குழு அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், இணையதளத்தில் சர்வே எண்ணைக் குறிப்பிட்டால் மட்டுமே நீர்நிலைகளின் விவரங்கள் தெரிய வருகிறது என்பதால், நீர்நிலைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கில், தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முதல்படியாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பளவு குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை அரசு தரப்பிலிருந்து அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நீர்வள ஆதராங்களை பெருக்கி அதன்மூலம் தமிழகத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு செயல்பட்டு வருவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுருந்தார்.
இந்த அறிக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ,அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என கடும் கண்டனம் தெரிவித்தனர். எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய இயலும். எனவே தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர் நிலைகள் உள்ளன, அதன் சர்வே எண், அதன் பரப்பளவு உள்ளிட்ட விவரங்களைதான் அரசிடம் கேட்டோம் என்று கூறிய நீதிபதிகள், ஆனால் அவை சமர்ப்பிக்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். அந்தவகையில் இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை காட்டுகிறது என்றும் கூறினர். சம்பிரதயாத்துக்காக மட்டுமே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி இவ்வழக்கில் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்த அளவுக்கு அசட்டையாக செயல்படுகின்றனர் என்பதற்கு இந்த வழக்கு விசாரணை ஓர் உதாரணம் என்று சமுக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
