உச்சசீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் மூடப்பட்ட மதுக் கடைகளை வரும் ஜுலை 10 ஆம் தேதி வரை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் 500 அடி தூரத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் 3200 மதுக் கடைகள் மூடப்பட்டன.

இதையடுத்து அதற்கு பதிலாக புதிய கடைகளை அரசு திறக்க முயன்றபோது பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் மூடப்பட்ட இடத்திலேயே  மீண்டும் கடைகளை திறக்க அரசு ஒரு குறுக்கு வழியை சிந்தித்து செயல்படுத்த முயன்றது. அதாவது நெடுஞ்சாலைகளை, ஊராட்சி சாலைகளாக மாற்றிவிட்டால் சட்ட சிக்கல் வராது என்பதே அந்த ஐடியா..அதன்படி அந்தந்த சாலைகளை ஊராட்சி சாலைகளாக மாற்றி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பும்படி ஊராட்சி மன்றங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது.

இதனை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மாநில நெடுஞ்சாலைகளை மாற்றிக் கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், வரும் ஜுலை 10 ஆம் தேதி வரை மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.