வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு இனி தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் அல்லது வெளிமாநிலங்களுக்கு விளையாடச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு இனி தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேகாலய மாநிலத்தில் நடைபெறும் 83 ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்க சக வீரர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஷ்வா தீனதயாள் சென்றார். அப்போது, அவர் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஷ்வா தீனதயாள் உயிரிந்தார். மேலும், அவருடன் சென்ற சக வீரர்கள் மூவர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அதன்பின் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், அவரது இல்லத்திற்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன் உயிரிழந்த விஷ்வாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், மிகச்சிறந்த டேபிள் டென்னிஸ் வீரரான விஷ்வா பல பதக்கங்களை வென்று இருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவர் தயார் படுத்தப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உயிரிழப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விஷ்வாவுடன் பயணித்து படுகாயமடைந்த ரமேஷ் சந்தோஷ்குமார், அபிநவ் மற்றும் கிஷோர் குமார் ஆகிய மூன்று பேரும் ஷிலாங்கில் உள்ள மருத்துவமனையில் சிரான உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களது முழுமையான மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களுக்கு விளையாட செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் தகுந்த அனுமதி பெற்ற பிறகே விளையாட்டு வீரர்கள் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு விளையாட செல்ல வேண்டும் என தெரிவித்தார். இதனிடையே டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்க சென்ற தமிழக வீரர் விஷ்வா தீனதயாள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
