விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு, உதவி செய்பவர்களிடம், அவர்களது விவரங்களை கேட்டு வற்புறுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கடந்த 2014ம் ஆண்டு 29ம் தேதி உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன் அடிப்படையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்பவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதற்கேற்றபடி, கடந்த ஜூலை 13ம் தேதி, தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதில், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, உதவிசெய்பவர்கள் மற்றும் நேரடியாக பார்த்த சாட்சிகள் யாரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். அப்படி செய்பவர்களிடம், முகவரியை மட்டும் வாங்கி கொள்ள வேண்டும். வேறுஎந்தகேள்வி கூடாது.
விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவோருக்கு அரசு தக்க சன்மானம் வழங்கவேண்டும். இது விபத்தில் சிக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆர்வமூட்டும். உதவி செய்பவர்கள் யாரும் எந்தவொரு சமூக மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.
சாலை விபத்து மற்றும் வாகன விபத்தில் காயமடைபவர்கள் பற்றிய விவரங்களை மருத்துவமனை மற்றும் காவல்துறைக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கும்போது, அவரது சொந்த விவரங்களை நேரிலோ அல்லது போன் மூலமோ கேட்டு வற்புறுத்தக்கூடாது. அதை கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும், அவரது சொந்த விருப்பம்.
அதேபோல் மருத்துவ படிவ்ங்களையும், பூர்த்தி செய்யும்படி அவர்களுக்கு வற்புறத்தல் செய்ய கூடாது. உதவி செய்பவரின், பெயர் மற்றும் பிற விவரங்களை கேட்போர் மீது ஒழுங்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவி செய்தவர்கள் யாராவது சாட்சி சொல்ல தாமாக விருப்பத்தை தெரிவித்தால் அவரிடம் காவல்துறை ஒருமுறை மட்டும் விசாரணை மேற்கொள்ளலாம். உதவி செய்பவர்களை துன்புறுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது.
விபத்தில் உதவி செய்பவர்கள், காயமடைந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது உறவினராக இல்லாதபோது, அவர்களிடம் இருந்து மருத்துவத்துக்கான செலவை செலுத்தவேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் வலியுத்த கூடாது. முதலில்,காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முற்பட வேண்டும்.
சாலை விபத்தில் அவசர சிகிச்சை அளிக்கவேண்டிய சூழ்நிலையில், ஒரு டாக்டர் அக்கறை செலுத்தாவிட்டால், அவர் மீது இந்திய மருத்துவ கழக ஒழுங்கு பணி நடத்தையின்மை எனக்கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
விபத்தில் உதவிசெய்வோர் கைது செய்யப்படமாட்டார்கள், வைப்புத் தொகை செலுத்த கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்று, அனைத்து மருத்துவமனை நுழைவாயிலிலும் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழியில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.

உதவி செய்தவர்கள் விரும்பினால், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த நேரம், விபத்து நிகழ்ந்த இடம், நாள் போன்றவை தொடர்பான ஒப்புகையை மருத்துவமனை நிர்வாகம் வழங்கலாம். இதற்கான ஒப்புகை படிவத்தை மாநில அரசு தயார் செய்து அனைத்து மருத்துவமனைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவமனகைள் இந்த நடைமுறையை உடனடியாக அமலுக்கு கொண்டுவரவேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
