பள்ளிபாளையம்,

நாமக்கல்லில், 30 ஆண்டுகளாக, பணியின்போது உயிரிழந்த தந்தையின் வேலையை தனக்கு தர வேண்டும் என்று கேட்டு வரும் மகனும், தாயும் நேற்று அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மோகன்ராஜ் (33). இவரது தந்தை கதிர்வேல். மின்வாரியத்தில் வேலை செய்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதனால் மோகன்ராஜ் தனக்கு மின்வாரியத்தில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று அன்றிலிருந்தே கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பள்ளிபாளையம் ஆர்.எஸ்.சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு மோகன்ராஜ் தனது தாய் பழனியம்மாளுடன் வந்தார்.

பின்னர் அவர், வாரிசு வேலை வழங்கக்கோரி திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து தாயுடன் அறப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள், மோகன்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.

இதனையடுத்து அவரும், அவருடைய தாயாரும் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.