சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கையையொட்டி வளிமண்டத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. 

அடுத்து வரும் 3 தினங்களில் தமிழகம் மற்றம் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அக்டோபர் 5 ஆம் தேதியொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வழுத்த பகுதி உருவாகக்கூடும். 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது. 

மீனவர்கள், குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகள், தெற்கு கேரளா, தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் அக்டோபர் 6 முதல் 8 வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகபட்சமாக மணல்மேல்குடி, தக்கலையில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில், விளாத்திக்குளம், கோவில்பட்டி 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், ஓரிருமுறை இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.