Heavy rains for two weeks The nature of the people lives are greatly affected ...

திண்டுக்கல்

கடந்து இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் இங்குள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து கூடியுள்ளது.

கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான அப்சர்வேட்டரி குடிநீர்த் தேக்கம், மனோ ரஞ்சிதம் அணை ஆகியவற்றில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்துக் கொண்டே. வருகிறது. ஏரியிலும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் இங்கு தொடர்ந்து படகுகளை இயக்குவதில் சிரமம் உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்த நிலையில், நேற்றும் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. கடும் குளிரும் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இங்குச் சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைந்துள்ளதால் வியாபாரிகள் சுற்றுலா இடங்களில் உள்ள கடைகளை திறக்கவில்லை.

கொடைக்கானல் – பழனி - வத்தலகுண்டு மலைப் பகுதிகளில் நீர்வரத்து உயர்ந்துள்ளதுடன் புதிய நீர் வீழ்ச்சிகள் ஏற்படவும் தொடங்கியுள்ளன. மேலும், மலைச் சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டாலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனிடையே பிரகாசபுரம், வசந்த நகர், இருதயபுரம், சகாயபுரம், அட்டக்கடி, சடையன்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். எனவே இவற்றை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கொடைக்கானல் ஆனந்தகிரிப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியை நகராட்சி குப்பை வாகனம் மூலமாக எடுக்க முயன்றபோது அது கவிழ்ந்தது. இதில் அந்த வாகன ஓட்டுநர் லேசான காயமடைந்தார். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.