Hurricane wind Farmers are very happy because they have water in the groves and gardens ...
கரூர்
கரூரில் சூறாவளி காற்றுடன் பெரும் மழை பெய்து பள்ளங்கள், தோட்டங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சூறாவளிக் காற்றுக்கு மின்கம்பங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் மரங்கள் சேதமடைந்தன.
கரூர் மாவட்டம், வெள்ளியணை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் கடுமையான வெயில் மக்களை பெரிதும் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் சூறாவளி காற்று அடிக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யவும் செய்தது.
இதில் வெள்ளியணை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரின் மேற்பகுதி சரிந்து விழுந்ததுடன், கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலும் விழுந்தது.
மேலும், திருவிழாவிற்காக கட்டப்பட்டு இருந்த பல மின் விளக்குகள் உடைந்து சேதமடைந்தன.
குமாரப்பாளையம், வேலப்பகவுண்டன்புதூர், தாளியாப்பட்டி, செல்லாண்டிப்பட்டி, சல்லிப்பட்டி, வழியாம்புதூர், சின்னகுளத்து தோட்டம், கட்டாரி கௌண்டனூர், மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள தோட்டத்து வீடுகளில் மாட்டுக் கொட்டகைகளின் கூரைகளும், ஆங்காங்கே குடியிருப்பு வீடுகளின் கூரைகளும் காற்றால் தூக்கி வீசப்பட்டன.
மேலும், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிப்பறையின் மேற்கூரையும் சாலையில் தூக்கி வீசப்பட்டது. பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்தன. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்தடை ஏற்பட்டது.
இவ்வாறு, வீடுகளின் மேற்கூரைகளும், மின்கம்பங்களும் காற்றால் விழுந்தபோதும் ஆடு, மாடுகள் மற்றும் மனிதர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதது மட்டுமே அப்பகுதியினருக்கு கிடைத்த ஒரே ஆறுதல்
அதனைத் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள பள்ளங்கள், தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ளியணை தெற்குபாகம் கிராம நிர்வாக அலுவலர் மீனாட்டி, வெள்ளியணை வடபாகம் கிராம நிர்வாக அலுவலர் மங்கையர்கரசி ஆகியோர் நேற்று சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நடத்தினர்.
