வேலூர்

வேலூரில் உள்ள மாதனூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து செழித்து வளர்ந்திருந்த வாழை, பப்பாளி மரங்கள் விழுந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 

வேலூர் மாவட்டத்தில் கோடைக்கால வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கூடவே அனல்  காற்று வீசுவதாலும் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவது கூட இல்லை. மேலும்., வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்பூர், மாதனூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்தப் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மாதனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பாலூர், திருமலைகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள், பப்பாளி மரங்கள் சாய்ந்து விழுந்தன. 

பாலூர் ஊராட்சி கீழ்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பலராமன், மோகன், காந்தி, வரதராஜூலு ஆகியோரின் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. குலை தள்ளி அறுப்புக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். 

இந்தப் பகுதியில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழை, பப்பாளி மரங்கள் சேதமடைந்து இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், வீட்டின் மேற்கூரைகளும், கோழி பண்ணையில் இருந்த கூரைகளும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. 

மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தும் பெரும் சேதம் ஏற்பட்டன். இதனால் மாதனூர் பகுதியில் இரவு முழுவதும் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

இவ்வளவு சேதத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அடிக்குற வெயிலுக்கு இந்த மழை இதமான சூழலை கொடுத்துள்ளதை நினைத்து மக்கள் சற்றே மகிழ்ச்சியுடன் தான் இருக்கின்றனர்.