தென் மேற்கு பருவக்காற்று மேலும் வலுவடைந்திருப்பதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி  மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியது. இதையடுத்து கன்னியாகுமரி முதல்  வட இந்தியாவின் பல பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.

 

தற்போது மும்பை மாநகரமே நீரில் மூழ்கியுள்ளது. தொடர் கனமழையால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலும் கனமழை கொட்டி வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை கொட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், கோவை மாவட்டம் மேட்டுப்பளையத்தை அடுத்த பில்லூர் டேம் நிரம்பி வருகிறது. அங்கிருந்து 18000 கன அடி  உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாலசந்திரன்,  தென் மேற்கு பருவக்காற்று  மீண்டும் வலுவடைந்திருப்பதால், தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களான கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார். இதே போல் சென்னை மாவட்டத்தைச் சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கன மழை செய்ய வாய்ப்பு உள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தார்.