தமிழகம் மற்றும் புதுவையில் தற்போது ஆங்காங்கு கனமழை பெய்து வருகிறது. வரும் 7 ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. 

நீலகிரி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்று ரெட் 
அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை வானிலை மையம் வாபஸ் பெற்றுள்ளது.  மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் எதிர்பார்க்கப்பட்ட அதிகனமழைக்கான வாய்ப்பு தற்போது இல்லாத நிலையில், இது தொடர்பான எச்சரிக்கை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறினார்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறும்போது, தெற்கு அந்தமான பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று தென் தமிழக பகுதியில் நிலவிய வலிமண்டல சுழற்சி விலகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 12 செ.மீட்டரும் விழுப்புரத்தில் 9 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.வரும் 8 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் 
கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை சிலமுறை மிதமான மழை பெய்யும் என்றும் இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறினார்.