மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மைய இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இரவில் வீட்டின் கதவை திறந்து வைத்தும், மொட்டை மாடிகளிலும் தூங்கினர்.

இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் திடீரென சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என கொட்டி தீர்த்தது. இதையொட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில், புதிய காற்றத்தம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக மத்திய வங்க கடல், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்றார்.