கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் பலத்த மழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்கிறது. இதனால், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், 'தமிழகம் முழுவதும் வரும், 4, 5ம் தேதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:- தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரம் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில், 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. 

இதைதொடர்ந்து அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும், 4, 5ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில், மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.

நேற்று இரவு சுமார் 12 மணி முதல் 1 மணி வரை வடசென்னை வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.