Heavy rain in tamilnadu

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…விவசாயிகள், பொது மக்கள் உற்சாகம்….

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தொடர்ந்து 7 மணி நேரம் மழை பெய்து வருவதால் ஏரிகளும், கண்மாய்களும் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அனைத்துப் பகுதிகளிலும், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே, சென்னை வளசரவாக்கம், எக்மோர்,நுங்கம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் அதிகாலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் தமிழகத்தில் வட மாவட்டங்களில் இன்று காலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. 

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களிலும், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, போளூர், திருச்சி மாவட்டம் துறையூர், மணப்பாறை, லால்குடி, மணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து 7 மணி நேரமாக பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.