தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் நீலகிரி மற்றும் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதையடுத்து நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியத் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை, தேனி, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்த மேகமலை எஸ்டேட் பகுதியில் கன மழை கொட்டி வருகிறது. இதையடுத்து சின்னமனூரில் இருந்து மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு எந்த நேரத்திலும் நிலச்சரிபு ஏற்படலாம் என அச்சம் நிலவுவதால், அந்த சாலை வழியாக மேலே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் நீலகிரி மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில்  பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பல பகுதிகிளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த இரு வட்டங்களிலும் தொடர்ந்து விடாமல் 48 மணி நேரமாக மழை கொட்டி வருகிறது. இதையடுத்து கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில்  உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.