நீலகிரி மாவட்டம் கூடலூர் ,தேவாலா, புத்தூர்வயல் போன்ற பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கன மழையால் பாதிக்கப்பட்ட  பொது மக்கள்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கூடலூர் பகுதியில் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நேற்று  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கடந்த 3 நாள்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட  4-ஆவது வார்டு  அரசு மேல்நிலைப் பள்ளி சாலையில் கழிவு நீர்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம் முழுவதும் சாலையில் தேங்கி அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி கொட்டும் மழையில் வெளியே வந்து நின்றனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பாண்டியாறு-புன்னம்புழா,  புத்தூர்வயல், முதல் மைல் பகுதியிலுள்ள ஆறுகள், ஓவேலி வனப் பகுதியிலுள்ள ஆறுகள், பந்தலூர் பகுதியிலுள்ள பொன்னானி ஆறு உள்ளிட்ட ஆறுகள் நிரம்பி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

 கூடலூரை அடுத்துள்ள புத்தூர்வயல் கிராமத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு,  அங்குள்ள தேன்வயல் பழங்குடி காலனியை முழுமையாக வெள்ளம் சூழந்தது.

தகவலறிந்த வருவாய்த் துறையினர்,  மீட்புக் குழுவினர் உதவியுடன் அங்கிருந்த 16 குடும்பங்களை மீட்டு அருகிலுள்ள புத்தூர்வயல் அரசுப் பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.

கூடலூரை அடுத்துள்ள வேடன்வயல் பகுதியில் விவசாயப் பயிர்கள் உள்பட அனைத்து பகுதியும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.  கூடலூர் கோழிப் பாலம் பகுதியில் கனமழையால் தொழிலாளர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.