கோடை வாசஸ்தலமான கொடைக்கானலிலும்  கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஒரு மணி நேரத்தக்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால் விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வட கிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயிகளும், பொது மக்களும் தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். அதுவும் கோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலும் வறட்சியே நிலவியது.

இந்நிலையில் நேற்று மாலை கொடைக்கானலில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சற்று நேரம் ஆக ஆக, மழை வலுக்கத் தொடங்கியது. இதையடுத்து ஒரு மணி நேரத்துக்கு மழை கொட்டித் தீர்த்தது.

இந்த மழையால் கொடைகானல் நன்கு குளிரத் தொடங்கியது. சுற்றுலாப் பயணிகள் குதூகலம் அடைந்தனர். இதே போல் விவசாயிகளும் இந்த மழையை கொண்டாடினர்.

இந்த திடீர் மழை முட்டைகோஸ், பீட்ருட் போன்ற பயிர்கள் நன்கு விளைய உதவும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.