வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது, கோவை,தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்த வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கேரளாவிலும், பின்னர் தமிழகத்திலும் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தென் மேற்கு பருவ மழை அதிக அளவில் இல்லாவிட்டாலும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பலத்த தற்போது காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர், புலிவலம், மாங்குடி, வண்டாம்பாளையம்,  சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த  மழை பெய்து வருகிறது.

இதே போன்று கோவை, உக்கடம் மற்றும் பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் திருச்சி மற்றும் மதுரையில் இன்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.