அடுத்த இரண்டு நாட்களுக்க வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னையில் ஒரு சில நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது அடுத்து வரும் 12 மணி நேரத்தல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். ஆந்திராவையொட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

 

இன்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்துடன் பலத்த காற்று வீசும். நாளை 65 முதல் 75 கி.மீ. வேகத்துக்கு கடல் காற்று வீசும். எனவே, இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். அந்தமான், தெற்கு - மத்திய வங்ககடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அடுத்து வரும் இரு தினங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார். தென்மேற்கு பருவக்காலத்தில் இதுவரை தமிழகத்தில் 14 சதவிகிதம் குறைவாக மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. 27.2 செ.மீ.க்கு பதில் ஜூன் 1 முதல் இதுவரை 23.5 செ.. மழை பொழிந்துள்ளது.