Heavy rain in Ariyalur 50 years old tree fall down

அரியலூர்

அரியலூரில் பெய்த ஆலங்கட்டி மழை தொடர்ந்து இடி, மின்னலுடன் செம்மையாக அரைமணிநேரம் நீடித்தது. இதில், 50 வருட பழமையான மரம் சாய்ந்தது. 

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4–ஆம் தேதி தொடங்கியது. கத்திரி வெயிலால் மக்கள் வாடி வதங்கி அவதிப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து அவர்களை குளிர்ச்சி அடைய செய்து வருகிறது. 

அதேபோன்று, அரியலூரிலும் கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 18–ஆம் தேதி திடீரென பலத்த காற்று வீசி இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். 

ஆனால், நேற்று மாலை 5 மணியளவில் அரியலூர் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் ஆலங்கட்டி மழை பெய்தது. இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. 

இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மழை பெய்யும்போது பலத்த சூறாவளி காற்றும் வீசியதால் அரியலூர் – செந்துறை சாலையில் இருசுகுட்டை பகுதியில் சாலையோரத்தில் 50 ஆண்டு பழமையான அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதேபோல கல்லூரி சாலை, அரியலூர் அரசு கலை கல்லூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் நின்ற சில மரங்கள் வேரோடு சாய்ந்தும், சில மரங்களில் கிளைகள் முறிந்து விழுந்தன. 

மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மின்சார கம்பிகள் மீது பட்டதால் மின்சாரம் கம்பிகளும் தாழ்வாக தொங்கின. இதனால் நிறைய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நகராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும், மழை பெய்யும்போது மின் தடை ஏற்பட்டது. இரவு வரை மின்சாரம் வரவில்லை. இந்த மழை சுமார் அரை மணிநேரம் நீடித்தது. இதனால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.